திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 30-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று சிறப்பு பூஜைகள் துவங்கியது. நேற்று 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். புத்தாண்டு என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று வந்த பக்தர்கள் இன்று தான் தரிசனம் செய்ய முடிந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று, பக்தர்கள் 14 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நெய்யாபிஷேகத்துக்கும், அப்பம், அரவணைப் பிரசாதம் வாங்குவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக எருமேலி (பெரியபாதை) மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடனடி தரிசனத்திற்காக சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வழியாக வரும் பக்தர்கள் உடனடியாக தரிசனம் செய்தனர்.
தினமும் அதிகபட்சமாக 5,000 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் பக்தர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்த பக்தர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக எருமேலி மற்றும் புல்மேடு வனப் பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அனுமதி சீட்டுகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.