கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடக தலைநகர் பெங்களூரு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தது. டேங்கர் லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை விலைக்கு வாங்கிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில்தான் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவராக தமிழ் ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத் மனோகர் நியமிக்கப்பட்டார். 1.4 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூருவின் தாகம் தீர்க்கும் லட்சிய சவாலாக அவருக்கு முன் இருந்தது.
பெங்களூருவில் நிலையான நீர்நிலைகள் இல்லாததால், காவிரி நீரை முறையாக விநியோகிப்பதில் கவனம் செலுத்தியதாக ராம் பிரசாத் மனோகர் கூறினார். வறண்ட ஏரிகளில் சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்பியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு குடிநீர் வழங்குவதே முதன்மை நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையும் பெங்களூருவின் தண்ணீர் பிரச்சனைக்கான தீர்வும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது என்றார். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஐநா அமைப்புகள் ஐந்து ஃபார்முலாக்களை கேட்டறிந்து தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் செயல்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக ராம் பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அடுத்த மாதம் கர்நாடக அரசு தங்கள் குழுவிற்கு பாராட்டு விழா நடத்தும் என்றார். ஏழை, எளிய மக்களுக்கு உதவ முடிந்த திருப்திதான் தனது பணியில் கிடைக்கும் திருப்தி என்கிறார் தமிழக ஐஏஎஸ் அதிகாரி.