டெல்லி: காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அதற்கு சதி செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறும் பாகிஸ்தான், கடந்த 4 நாட்களாக எல்லையில் இரவு நேரங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று வழங்கினார். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக நான் வருந்துகிறேன்.

இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக செய்யும் என்று நம்புகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன். ஐக்கிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். டெல்லியில் ஏராளமான பாதுகாப்புப் படையினரை நான் பார்த்திருக்கிறேன். எல்லையில் ராணுவ வீரர்கள் இருப்பதால், நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.
இந்தச் சூழலில் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்குள் எந்த முரண்பாடும் இருக்கக்கூடாது. நாம் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்” என்றார்.