டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக முதல்வர் ஆதிஷி கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ.40 லட்சம் நன்கொடை சேகரிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தனது ஆன்லைன் நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அடுத்த 24 மணி நேரத்தில், 455 பேர் ரூ.19,32,728 நன்கொடை அளித்துள்ளனர். இது தொடர்பாக, எக்ஸ்-தள பதிவிட்டதாவது, “நிதி திரட்டும் பிரச்சாரத்தின் முதல் நாளில் கிடைத்த அமோக ஆதரவைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் தூய்மையான, நேர்மையான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியலில் மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.” பாஜக சார்பாக ஆதிஷியை எதிர்த்து முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.