புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி (98) வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த 12-ம் தேதி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏறக்குறைய 14 நாட்களுக்குப் பிறகு, அவர் நேற்று இரவு உடல் நலத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக, மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அத்வானியை நரம்பியல் நிபுணர் டாக்டர் வினீத் சூரி தலைமையிலான குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு, ஜூன் 26-ம் தேதி இரவு, திடீரென அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர் அம்லேஷ் சேத் தலைமையிலான குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்தனர். அடுத்த சில நாட்களில் அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.