மைசூர்: மைசூர் நகரின் கியாத்மாரனஹள்ளி பகுதியில் உள்ள மசூதி, 2016 ஆம் ஆண்டு இந்து தலைவர் ராஜு கொலை செய்யப்பட்ட பின்னர் கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மசூதி மூடப்பட்டது.
மசூதி திறப்பு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த வாரம், சம்பந்தப்பட்ட தரப்பினர் உள்ளூர்வாசிகளுடன் பேசி 12 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் குழுவுடன் கலெக்டர் லட்சுமி காந்த் ரெட்டி ஒரு சந்திப்பை நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு, கலெக்டர், “இரு தரப்புத் தலைவர்களும் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தற்போது நான் வேறு எதுவும் கூற முடியாது” என்றார்.
முஸ்லிம் தரப்பில், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் சவுகத் பாஷா ஒரு பேட்டியில், “கியாதமரனஹள்ளி பகுதியில் மூடப்பட்டது மசூதி அல்ல, மதரஸா. அந்தப் பகுதி இப்போது அமைதியானது. நான்கு ஆண்டுகளாக அறக்கட்டளை மதரஸாவை நடத்தி வந்தது. எனவே, மதரஸாவைத் திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “2009 ஆம் ஆண்டில், மைசூர் மாநகராட்சியின் அனுமதியுடன் மதரஸாவை நடத்துவதற்கு அறக்கட்டளை அனுமதி பெற்றது. மதரஸாவைத் திறப்பதற்கு எந்த அரசியல் சம்பந்தமும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கு பதிலளித்த இந்து அமைப்புத் தலைவர் சிவகுமார், “தற்போதைய அமைதி நிலைமை பராமரிக்கப்பட வேண்டும். மதரஸா அல்லது மசூதியை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது. 2016 ஆம் ஆண்டில், இந்துத் தலைவர் ராஜூ கொல்லப்பட்டார், கலவரம் வெடித்தது. தற்போதைய அமைதி நிலைமை சீர்குலைக்கப்படக்கூடாது” என்று அவர் கூறினார்.
அப்பகுதி மக்கள் தற்போது நிரந்தர அமைதியை விரும்புகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.