புதுடில்லி: வேலை வாய்ப்பு நேர்காணல்களில் ஏ.ஐ. உதவியுடன் மோசடி நடைபெறுவதை கண்டித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கவலை தெரிவித்துள்ளார். ஆன்லைன் வழியாக நடைபெறும் நேர்காணல்களில் பல்வேறு விண்ணப்பதாரர்கள் ஏ.ஐ. கருவிகளை பயன்படுத்தி கேள்விகளுக்கு எளிதில் பதில் அளித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையான திறமைகள் பணியில் சேர்ந்தபின் வெளிப்படுவதில்லை என்பதால் நிறுவனங்கள் சிக்கலில் சிக்கியுள்ளன.

இந்நிலையில், இனி கூகுளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது ஒரு நேர்காணலில் நேரில் பங்கேற்க வேண்டும் என்று பிச்சை அறிவித்துள்ளார். குறிப்பாக இன்ஜினியரிங் மற்றும் புரோகிராமிங் பணிகளுக்கான தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடத்தப்படும். விண்ணப்பதாரர்களுக்கு கணினி அறிவியல் தொடர்பான அடிப்படை புரிதல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த மாற்றம் கொண்டு வரப்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், ஆன்லைன் நேர்காணல்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏ.ஐ. மூலம் மோசடி செய்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதுவே நிறுவனங்களை நேர்காணல் முறைமையில் மாற்றங்களை செய்யத் தூண்டியுள்ளது.
கூகுள் மட்டுமல்லாமல் அமேசான், சிஸ்கோ, டெலாய்ட், மெக்கன்சி போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களும் ஆன்லைன் முறையை கைவிட்டு நேரடி நேர்காணல்களை நடத்தத் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.