ஏர் இந்தியா Boeing 787 Dreamliner விமானம் கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. இதன் பின், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்கள் பெரிதும் குறைந்துள்ளன. பயண தளமான ixigo வெளியிட்ட தரவுகளின்படி, Advance Purchase Days அடிப்படையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கட்டணங்களில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூன் 13 முதல் 19 வரை சராசரி கட்டணங்கள், ஜூன் 6 முதல் 12 வரை கட்டணங்களுடன் ஒப்பிடப்பட்டபோது, விமான விபத்துக்குப் பிறகு கட்டணங்கள் வெகுவாக குறைந்துள்ளன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

சர்வதேச வழித்தடங்களில் புதுடெல்லி-கோலாலம்பூர் விமான கட்டணம் 16% குறைந்து ரூ.11,389 ஆக உள்ளது. துபாய், சிட்னி வழித்தடங்களில் 5%, மெல்போர்னில் 2% மற்றும் மும்பை வழித்தடங்களில் 1% வரை கட்டணக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், UK க்கான டிக்கெட் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு விமான சேவைகளிலும் இதேபோன்ற குறைவுகள் தென்படுகின்றன. பெங்களூரு-ஹைதராபாத் வழித்தடத்தில் கட்டணம் 24% குறைந்து ரூ.3,314 ஆக உள்ளது. பெங்களூரு-புனே மற்றும் பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் 22%, புது தில்லி-அகமதாபாத் 21%, மும்பை-சென்னை 21% குறைவுகள் காணப்படுகின்றன. சில வழித்தடங்களில் 1-2% மட்டுமே குறைவு ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் 33 Dreamliner விமானங்களையும் சோதனையிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் 26 விமானங்கள் தற்போது வரை சோதிக்கப்பட்டுள்ளன. விமான விபத்துக்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜூன் 20 முதல் ஜூலை மாத நடுப்பகுதி வரை சர்வதேச சேவைகளை 15% வரை குறைக்கும் முடிவையும் ஏற்கப்பட்டுள்ளது. இது கூடுதல் விமானங்கள் தயாராக இருக்க ஏற்படும் தேவையை நிறைவேற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா CEO கேம்பபெல் வில்சன் வெளியிட்ட அறிக்கையில், Dreamliner விமானத்தின் எஞ்சின்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், ஜூன் 2023 இல் விமானம் முழுமையாக சோதிக்கப்படப்பட்டதாகவும் கூறினார். பயணத்துக்கு முன் எந்தவித குறையும் காணப்படவில்லையெனவும் விளக்கமளித்தார். பயணிகள் விமான கட்டணங்கள் குறைவால் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், ஏர் இந்தியா விமானப் பாதுகாப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.