புது டெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனரில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி சேதமடைந்துள்ளதால், விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்களைப் பெறுவது கடினமாக உள்ளது. இதன் காரணமாக, அதை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பலாமா வேண்டாமா என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 12-ம் தேதி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். ஒரு பிரிட்டிஷ்-இந்திய பயணி மட்டுமே உயிர் பிழைத்தார். மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில், மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டனர். விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. அதில் ‘காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) மற்றும் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) ஆகிய இரண்டு சாதனங்கள் இருக்கும். CVR சாதனம் விமானி அறையில் நடந்த உரையாடல்களைப் பதிவு செய்யும்.
இந்த FDR சாதனம், உயரம், வேகம் மற்றும் விமானியின் சூழ்ச்சிகள் உட்பட பல தகவல்களை சுமார் 25 மணி நேரம் பதிவு செய்யும். இந்த தகவல் கிடைத்தால், விமான விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி, டெல்லியில் உள்ள கருப்புப் பெட்டி பகுப்பாய்வு மையத்திற்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டது. ரூ. 9 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த நவீன பகுப்பாய்வு மையம், ஏப்ரல் 9-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் விமானத்தின் கருப்புப் பெட்டி சேதமடைந்ததால், அதில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க முடியவில்லை.
எனவே, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்ப மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று தெரிகிறது.