புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர்.
மூன்று பேர் இறந்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது மட்டுமின்றி அதை தாங்கியிருந்த பீம் கூட விழுந்ததால் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளனரா என்பது குறித்து டெல்லி தீயணைப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாலை 5.30 மணியளவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் அங்கு விரைந்தனர். பீம் சரிந்து சேதமடைந்த காரில் இருந்து ஒருவர் மீட்கப்பட்டார். இச்சம்பவத்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக டெர்மினல் 1 பகுதியில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் இடையூறுக்கு வருத்தம் தெரிவித்தது. மேலும், இந்த சம்பவத்தை தனிப்பட்ட கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளப் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) அங்கு மழை பதிவானது. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த தொடர் மழையால், டெல்லி மற்றும் அதை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பருவமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வு மையங்கள் நேற்று தெரிவித்திருந்தன.
அதே சமயம் பருவநிலை மாற்றத்தால் கடும் வெப்பம் மற்றும் மழை இரண்டையும் எதிர்கொள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.