மும்பை: நானும் அஜித் பவாரும் ஒரே குடும்பத்தில் வசிக்கிறோம் என்று சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால், அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை நீடித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அஜித் பவாருக்கு ஒதுக்கப்பட்ட கடிகாரச் சின்னத்தை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சரத் பவார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் சந்திர பவார் சிப்லுனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”நானும் அஜித் பவாரும் இணைய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். நானும், மருமகன் அஜித் பவாரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆனால் குடும்பத்தில் ஒன்றாக வாழ்கிறோம்.
அஜித் பவார் தனது மனைவி சுனேத்ரா பவாரை பாராமதி தொகுதியில் நிறுத்தினார். லோக்சபா தேர்தலில் எனது மகளை நிறுத்தினேன், தேர்தலுக்குப் பிறகு தனது மனைவியை நிறுத்தியது தவறு என்று அஜித் பவார் ஒப்புக்கொண்டார்.