புதுடில்லி: பணமூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்கம் தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இது எந்த ஒரு தனிப்பட்ட கட்சியின் நோக்கமல்ல; நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த நிலைப்பாடாக மாறியுள்ளது என அவர் விளக்கமளித்தார்.

ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் அனைத்து முக்கிய அரசியல் தலைவர்களுடனும் பேசியுள்ளேன். அவர்களில் எவரையும் விலக்கவில்லை. அவர்களின் கருத்துக்களைப் பெற்றேன். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும், காங்கிரஸும் உட்பட, முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன,” என்றார்.
நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அதில் ஊழல் புகுந்துவிட்டால், அது நாட்டின் சட்ட மற்றும் நியாய அமைப்பை பாதிக்கும். நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு ஏற்படும்போது, கட்சி பேதமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு என்றும் ரிஜிஜூ வலியுறுத்தினார். இது போன்ற நடவடிக்கைகளால் நீதித்துறையின் மதிப்பும் நம்பிக்கையும் பாதுகாக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், ஊழலை அரசியல் கோணத்தில் பார்க்காமல் ஒற்றுமையுடன் எதிர்கொள்வதே சரியான வழி என அவர் கூறினார். நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்திற்கு அனைத்து கட்சிகளும் கையெழுத்திட தயாராக உள்ள சூழல், நாட்டில் நீதிக்கான பொது நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் ரிஜிஜூ தெரிவித்தார்.