புதுடெல்லி: எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சி அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் கட்சி வேறுபாடுகளைக் களைந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 22) தொடங்குகிறது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடர் தொடங்கும் முன் பார்லி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
பார்லி.,யின் முக்கிய கூட்டம் இன்று துவங்குகிறது. கூட்டம் சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஆக்கபூர்வமான சந்திப்புகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வளர்ச்சி பாதையில்..
பட்ஜெட் கூட்டத்தொடரை நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய அமுத சகாப்தத்தை உருவாக்கும் வகையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வளர்ந்த பொருளாதாரங்களை விட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். நாடு வளர்ச்சிப் பாதையில் தொடரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு இது முக்கியமான தருணம்.
ஒற்றுமை
மக்களின் நலன் கருதி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். 2029 தேர்தல்களின் போது அரசியல் இயக்கங்கள் ஏற்படலாம்; இப்போது மக்கள் நலனே முக்கியம். தேர்தல் பிரச்சாரம் மற்றும் போட்டியிட்ட நிகழ்வுகள் அனைத்தும் முடிந்துவிட்டன; இப்போது நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சி அரசியலில் இருந்து வெளியேற வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக போராட வேண்டும். கட்சி பேதமின்றி அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும்.
தோல்வியிலிருந்து வெறுப்பு
அவர்களின் ஏமாற்றத்தால், சிலர் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். பார்லி., தேர்தல் நேரத்தில் அரசியல் பேச்சு நடத்தலாம். அரசின் குரலை நசுக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது. விரக்தியில் எல்லா விஷயங்களிலும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவது சரியல்ல. தோல்வியால் ஏற்பட்ட மனக்கசப்பால் எதிர்க்கட்சிகள் பார்லி.யின் நேரத்தை வீணடித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.