புதுடெல்லி: டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காற்று மாசுபாட்டை தடுக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது:-
குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பச்சை பட்டாசு உட்பட அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2025 வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த தடையை அமல்படுத்த போலீஸ் துறை, டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். விழாவைக் கொண்டாடுவது அவசியம்.
அதே நேரத்தில் காற்று மாசுபாட்டையும் தடுக்க வேண்டும். தீபாவளியை மக்கள் தீபம் ஏற்றி இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
டெல்லியில் வசிக்கும் ஒவ்வொருவரும் மாசுபாட்டிற்கு எதிரான போராளியாக மாறினால், பொதுமக்களை காற்று மாசுபாட்டின் ஆபத்தில் இருந்து பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.