பிரேசிலின் அமேசான் காடுகள் உலகின் “பூமியின் நுரையீரல்” என அழைக்கப்படும் அளவிற்கு ஆக்சிஜனை வெளியிட்டு, உயிரினங்களையும் பழங்குடி இனத்தவர்களையும் பாதுகாத்து வருகிறது. ஆனால், மனித பேராசையால் இக்காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் ஆபத்தில் சிக்கி வருகின்றனர்.
லண்டனைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவலின்படி, கடந்த 12 ஆண்டுகளில் (2012 முதல் 2024 வரை) அமேசான் காடு அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,253 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர், கொலம்பியாவில் 250 பேர், பெருவில் 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக லத்தின் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் கொலம்பியா அதிக உயிரிழப்புகளுக்குப் பொறுப்பாக உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 142 பேர் மரணமடைந்த நிலையில், அதில் 82 சதவீதம் லத்தின் அமெரிக்காவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடுபவர்கள் குறிக்கோளாகக் கொல்லப்படுவது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பழங்குடி சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டங்களை அமல்படுத்த அரசுகள் முன்வர வேண்டும் என்று குளோபல் விட்னஸ் வலியுறுத்தியுள்ளது. மேலும், மனித உரிமை மீறல்கள் மற்றும் இயற்கை அழிவுகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.