புதுடில்லி நகரில் நடைபெற்ற ஹிந்தி திவாஸ் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து இந்திய மொழிகளும் சமமான மரியாதை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அமித்ஷா தனது உரையில், இந்திய மொழிகள் நமது கலாச்சாரம், வரலாறு, தத்துவம், அறிவியல், ஆன்மிகம் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்துள்ளன என்று குறிப்பிட்டார். “ஒன்றாக நடப்போம், ஒன்றாக சிந்திப்போம், ஒன்றாகப் பேசுவோம்” என்பது நமது மொழியியல் உணர்வின் அடிப்படை மந்திரம் என்று அவர் வலியுறுத்தினார்.

நாடு சுதந்திரம் பெற்றபின், 1949 செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஹிந்த்’ போன்ற முழக்கங்கள் நமது மொழிப் பெருமையின் அடையாளங்களாக மாறியுள்ளன என்று அவர் நினைவூட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய மொழிகளின் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை, ஜி20, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உள்ளிட்ட பல சர்வதேச மேடைகளில் பிரதமர் மோடி, ஹிந்தி உட்பட இந்திய மொழிகளின் சிறப்பை எடுத்துரைத்திருப்பதாக அமித்ஷா குறிப்பிட்டார். மேலும், 2014 முதல் அரசு பணிகளில் ஹிந்தி பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.