ஜார்கண்ட்: ஜார்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாலமு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “தேர்தல் பிரசாரத்தின் போது, அரசியல் சாசன புத்தகத்தை ராகுல் காந்தி காட்டுகிறார். ஆனால், அந்த புத்தகம் உண்மையில் அரசியலமைப்பு புத்தகம் அல்ல.
இந்த விவகாரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அம்பலமானார். ராகுல் காந்தி காட்டும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் நகல் ஒருவருக்கு கிடைத்துள்ளது. எந்த உள்ளடக்கமும் இல்லாத புத்தகத்தின் அட்டையில் இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்க வேண்டாம். இது அரசியலமைப்பின் மீதான நம்பிக்கை பற்றியது. அரசியல் சாசனத்தின் போலி நகலைக் காட்டி அம்பேத்கரையும் அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள்.
காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளார். ஓபிசி, பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் மோசமான நோக்கத்தை காங்கிரஸ் கொண்டுள்ளது. காங்கிரஸ் ஓபிசி ஒதுக்கீட்டை எதிர்க்கிறது.
மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை உலமா பிரதிநிதிகள் சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக அக்கட்சி உறுதியளித்தது. மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.
உங்களின் நான்காவது தலைமுறை கூட சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று ராகுல் காந்தியை நான் எச்சரிக்கிறேன். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாக உள்ளது,” என்றார்.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதி நடைபெறும்.