ராய்காட்: மகாராஷ்டிர மக்களால் மிகவும் மதிக்கப்படும் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 345-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராய்காட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, முதல்வர் ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஷிண்டே மற்றும் அஜித் பவார், சிவாஜி மகாராஜாவின் வழித்தோன்றல் எம்பி உதயன்ராஜே போசலே, அமைச்சர் சிவேந்திர சிங் போசலே ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: சிவாஜி மகாராஜாவின் அனைத்து வழிகாட்டுதல்களும், நாட்டை வல்லரசாக மாற்றும் இந்தியாவின் லட்சியத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும். சிவாஜி மகாராஜாவை மட்டும் கொண்டாட வேண்டாம் என்று மகாராஷ்டிர மக்களை கேட்டுக் கொள்கிறேன். அவரது உறுதியும் தைரியமும் ஒட்டுமொத்த நாட்டையும் ஊக்குவிக்கும்.
முகலாயர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் சிவாஜி மகாராஜா. உலகையே வென்றுவிட்டதாகப் பெருமையடித்த முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தன் வாழ்நாள் முழுவதும் மராட்டியர்களுக்கு எதிராகப் போராடினார். ஆனால் அவர் இந்த மண்ணிலேயே இறந்தார். அவரது கல்லறையும் இந்த மண்ணில்தான் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிவாஜி மகாராஜாவின் வழிகாட்டுதலின் பேரில்தான் நம் நாட்டின் கடற்படை உருவாக்கப்பட்டது. இப்போதும் அவரது சின்னம் கடற்படையில் பயன்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியும் சிவாஜி மகாராஜாவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.