பாரத மண்டபத்தில் இச்சேவையை துவக்கி வைத்து அமித்ஷா பேசியதாவது:- வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிக்க, இந்திய புலனாய்வு அமைப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதை உணர்ந்துதான் இன்டர்போல் போல பாரத்போல் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கியுள்ள இந்த போர்டல் மூலம் சர்வதேச ஏஜென்சிகளின் உதவியை உடனடியாக பெற முடியும். மேலும், இந்த போர்டல் மூலம் மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் இன்டர்போலுடன் எளிதாக இணைத்து விசாரணையை துரிதப்படுத்த முடியும். இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நமது ஏஜென்சிகளுக்கு நேரம் வந்துவிட்டது.
உலகளாவிய ரீதியில் எழும் சவால்களை நாம் அறிந்திருக்க வேண்டும் மற்றும் நமது உள் அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டும். பாரத்போல் அந்த திசையில் ஒரு படி. சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய பாரத்போல் போர்ட்டல், 195 உறுப்பினர்களைக் கொண்ட இன்டர்போல் அமைப்பிலிருந்து தங்கள் வழக்குகளுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகளுக்கு ஒரு பாலமாகச் செயல்படும்.
பாரத்போலின் செயல்பாடுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்து மாநிலங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் பொறுப்பை சிபிஐ ஏற்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.