புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் மத்திய அரசை ஆண்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி லோக்சபா தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஜூன் 9-ம் தேதி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தற்போது 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ளது.
இந்த முதல் 100 நாள் ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில், அமித்ஷா பேசியதாவது:-
பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய ஆட்சியில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்கு ஒட்டுமொத்த தேசமும் முன்வர வேண்டும். மணிப்பூரில் நிரந்தர அமைதிக்காக மெய்டீஸ் மற்றும் குக்கி ஆகிய இரு சமூகங்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
கடந்த 3 நாட்களாக வன்முறை எதுவும் நடக்கவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும். அதன்பின் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிக்கப்படும். தொடர் ரயில் விபத்துகளுக்கான மூல காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.
இதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அரசு உறுதியாக உள்ளது. ரயில் விபத்துகளை ஏற்படுத்தும் எந்த சதியும் நீண்ட காலம் நீடிக்காது என்றார்.