புது டெல்லி: தப்பியோடிய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள் குறித்த இரண்டு நாள் மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஏற்பாடு செய்த இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, “பொருளாதார குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, சைபர் குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, பயங்கரவாத நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் எதிராகவும் இரக்கமற்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

ஊழல், குற்றம் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு வெளியே இருந்து செயல்படும் குற்றவாளிகளுக்கும் எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் இந்திய நீதி அமைப்பின் முன் நிறுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
அதற்கான நேரம் வந்துவிட்டது. தப்பியோடிய அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரவும், இதற்கான உறுதியான வழிமுறைகளை நிறுவவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.