சென்னை: திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை நெய் விநியோகம் செய்யவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில பதிவுகள் வெளியானதை அடுத்து இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நாங்கள் ஒருபோதும் நெய் விநியோகம் செய்யவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். அமுல் நெய் ஐஎஸ்ஓ தர சான்றளிக்கப்பட்ட ‘ஸ்டேட் ஆஃப் ஆர்ட்’ உற்பத்தி வசதிகளின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமுல் நெய் உயர்தர பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எங்கள் பால் பண்ணைக்கு வரும் அனைத்து பால்களும் கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் மூலம் செல்கிறது.
இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) விதிமுறைகளின்படி பாலின் தரம் கலப்படம் இல்லாமல் தூய்மையாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அமுல் நெய் இந்தியாவில் மிகவும் நம்பகமான நெய் ‘பிராண்ட்’ ஆகும்.
அதனால்தான் அமுல் தயாரிப்புகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வீடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அமுலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 258 3333 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.