ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி கோரினார். ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஆந்திராவில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி கோரினார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
போலாவரம், அமராவதி திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திராவில் முந்தைய ஆட்சியில் 94 மத்திய திட்டங்களுக்கான நிதி வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன். நிதி விவகாரங்களில் ஆந்திர அரசு எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
2047-ம் ஆண்டுக்குள் ஆந்திராவை அனைத்து துறைகளிலும் வளர்ந்த மாநிலமாக மாற்றும் ஸ்வர்ண ஆந்திரா 2047 திட்டம் குறித்த விரிவான அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தேன். ஆந்திராவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தேன். அவரது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திராவில் ஆர்சிலர் மிட்டல் எஃகு ஆலை அமைப்பது குறித்தும் பிரதமர் மோடியுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு விரிவாக ஆலோசனை நடத்தினார். முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது, ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தார்.