அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் உள்ள செயலகத்தில் வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.1,200-க்கு வாங்கப்பட்டு, அந்தந்த மாவட்ட சமூக நலத் துறைகளுக்குச் சொந்தமான இடங்களில் உலர்த்தப்படும். அதன் பிறகு, விவசாயிகள் சந்தைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக, விவசாயிகள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார்கள்.

பொதுமக்கள் அதிக விலைக்கு வெங்காயத்தை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது. கள்ளச்சந்தை விற்பனை உடனடியாக நிறுத்தப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். ஆந்திரப் பிரதேச சுகாதார அமைச்சர் சத்யகுமார் யாதவ் தலைமையில் மருத்துவத் துறை அதிகாரிகள் கூட்டம் நேற்று அமராவதியில் நடைபெற்றது.
பின்னர், கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சத்யகுமார் யாதவ், “ஆந்திரப் பிரதேசம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரசு செலவில் கிராம மருத்துவமனைகள் அமைக்கப்படும். ரூ. 1,129 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த மருத்துவமனைகள், கிராம மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கும். இவற்றில் 80 சதவீதம் மத்திய அரசால் நிதியளிக்கப்படும்” என்றார்.