புதுடில்லி: தொழிலதிபர் அனில் அம்பானி மீதான பணமோசடி வழக்கில் புதிய திருப்பமாக, அவரது நெருங்கிய உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசோக் குமார் மீது குற்றச்சாட்டுகள் உறுதியானதாக கூறப்படுகிறது.

அனில் அம்பானி தலைமையிலான ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி வழங்கிய ரூ.3,000 கோடி கடன், சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இணைந்து விசாரணை தொடங்கின. சுமார் ரூ.17,000 கோடி மதிப்பிலான பண மோசடி தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பல முக்கிய ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் நிதி பரிமாற்றத் தகவல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை கடந்த மாதம் அனில் அம்பானி வீடு மற்றும் அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. மேலும், அவருக்கு சம்மன் அனுப்பி, நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அவர் விசாரணைக்கு முன்னிலையாகியபோதும், அசோக் குமார் வழங்கிய தகவல்கள் விசாரணையை புதிய திசையில் நகர்த்தியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன், இதே வழக்கில் ‘பிஸ்வால் டிரேட்லிங்க்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வாலும் கைது செய்யப்பட்டிருந்தார். ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு போலி வங்கி உத்தரவாதம் பெற அவர் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போதைய கைது மூலம் வழக்கு மேலும் சிக்கலாகி, அனில் அம்பானி மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.