புதுடில்லி: இந்திய தொழில்துறையில் முக்கியமான ஒரு நபராக இருந்த அனில் அம்பானி, தற்போது கடும் ஆபத்தான விசாரணையில் சிக்கியுள்ளார். ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு, பண மோசடி வழக்கில் ஆகஸ்ட் 5ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை (ஈ.டி.) சம்மன் அனுப்பியுள்ளது.

2017 முதல் 2019 வரை எஸ் வங்கி, ராகாஸ் குழும நிறுவனங்களுக்கு 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஆனால், அந்தக் கடனில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகையை, சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியதற்காக அனில் அம்பானி மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், எஸ்.பி.ஐ. வங்கியும் அவரை மோசடியாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அனில் அம்பானிக்குச் சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். வர்த்தகப் பதிவுகள், கணக்குப் பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைக்காக அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பி, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நாட்டில் பெரிய தொழிலதிபர்களின் நிதி மேலாண்மை முறைகளின் மீது மீண்டும் ஒரு கேள்விக்குறியைக் கிளப்பியுள்ளது. அனில் அம்பானி ஆஜராகும் நாளில் புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.