புதுடெல்லி: சந்திரயான் 1, அக்டோபர் 22, 2008 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை சுற்றி வர 312 நாட்கள் ஆகும்.
சந்திரயான்-1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிந்தது. இதன் திட்ட இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார்.
சந்திரயான் 2 ஜூலை 22, 2019 அன்று ஏவப்பட்டது. விண்கலம் செப்டம்பர் 8, 2019 அன்று நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 நிலவில் விழுந்தது. லேண்டர் மற்றும் ரோவர் சேதமடைந்தன.
இருப்பினும், ஆர்பிட்டர் சந்திரனைச் சுற்றி வந்து ஆய்வு செய்தது. சென்னையைச் சேர்ந்த முத்தையா வனிதா சந்திரயான் 2 திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். சந்திரயான் 3 ஜூலை 14, 2023 அன்று ஏவப்பட்டது. விண்கலம் ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. சந்திரயான்-3 திட்ட இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி வந்தார்.
அடுத்த கட்டமாக, சந்திரயான்-4 திட்டத்துக்கு, செப்டம்பர், 18-ல், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இத்திட்டம், 2027-ல் செயல்படுத்தப்படும்.இதன் மூலம், நிலவில் இருந்து, 3 கிலோ தாதுக்களை, இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சந்திரயான்-5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-
இந்தியாவும் ஐபானும் இணைந்து சந்திரயான்-5 திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்திற்கு சந்திர துருவ ஆய்வு திட்டம் (LUPEX) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இரு நாடுகளின் கூட்டு திட்டத்தில் ரோவரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ லேண்டரை தயார் செய்து வருகிறது. இது மிகப்பெரிய திட்டம். கடந்த ஒரு வருடமாக லேண்டர் மற்றும் ரோவரின் வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சந்திரயான்-5 திட்டத்தில் அதிக சக்தி வாய்ந்த மற்றும் அதிக எடை கொண்ட லேண்டர் மற்றும் ரோவரை பயன்படுத்த உள்ளோம். சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முன்னோடித் திட்டம் இது. இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
ஜப்பான் விஞ்ஞானிகள் கூறியதாவது:= இந்தியாவும், ஜப்பானும் இணைந்து லுபெக்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. சந்திரனில் தண்ணீர் உள்ளதா, அதில் என்னென்ன கூறுகள் உள்ளன என்பதை லுபெக்ஸ் திட்டம் ஆய்வு செய்யும்.
இந்த திட்டத்திற்காக ஜப்பான் ரோவரை உருவாக்கி வருகிறது. இது அமெரிக்க நாசா விண்வெளி மையம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் அதிநவீன கருவிகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
ரோவர் சந்திர மேற்பரப்பு மற்றும் சந்திர உறுப்புகளை சேகரிக்கும். அவை பூமிக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு கூறினார்கள்.