மகாராஷ்டிரா: தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், மகாராஷ்டிர மாநில அரசு வருகின்ற 2026-27 கல்வியாண்டு முதல் ஹானர்ஸ் மற்றும் ஹானர்ஸ் வித் ரிசர்ச் ஆகிய சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
உயர்கல்வி துறையில் ஒரே மாதிரியான மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி முறையை கொண்டு வரும் நோக்கில் இந்த மாபெரும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, இந்த நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு ஒட்டுமொத்தமாக 8 செமஸ்டர்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று ஆண்டுகளை, அதாவது 6 செமஸ்டர்களை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், தங்களது விருப்பத்தின் அடிப்படையில் வழக்கமான இளங்கலை பட்டத்துடன் கல்வியை முடித்துக்கொள்ளலாம்.
கல்வியை மேலும் தொடர விரும்பும் மாணவர்கள், நான்காம் ஆண்டான 7 மற்றும் 8-வது செமஸ்டர்களில் Standard Honours அல்லது Honours with Research ஆகிய இரண்டு பிரத்யேக தேர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
நான்கு ஆண்டு இளங்கலை ஹானர்ஸ் படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், தங்களது நான்கு ஆண்டு படிப்புக்காலத்தில் ஒட்டுமொத்தமாக 160 முதல் 176 வரையிலான கல்வித் தரப்புள்ளிகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும், இந்த ஹானர்ஸ் படிப்பில், மாணவர்கள் தங்களது இறுதியாண்டில் 4 கல்வித் தரப்புள்ளிகளை கொண்ட Internship பயிற்சியை கட்டாயமாக முடிக்க வேண்டும். இந்த பயிற்சியானது மாணவர்களுக்கு நேரடியான செய்முறை அறிவையும், துறை சார்ந்த வேலைவாய்ப்பு திறன்களையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிப் பிரிவான ஹானர்ஸ் வித் ரிசர்ச் படிப்பை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள், முதல் மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் 7.5 சிஜிபிஏ மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்ற முக்கிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகுதியை பெற்ற மாணவர்கள், தங்களது இறுதியாண்டில் 12 கிரெடிட்களை கொண்ட ஒரு விரிவான ஆராய்ச்சித் திட்டம் அல்லது ஆய்வுக் கட்டுரையை தங்களது முதன்மை பாடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உலகளாவிய கல்வி தரத்திற்கு இணையான ஆராய்ச்சி திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கத்திலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.