மும்பை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும், தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த சானியா சந்தோக்கும் இரு குடும்பத்தினரின் முன்னிலையில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 25 வயதாகும் அர்ஜூன், தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மும்பை பிரீமியர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சில போட்டிகளில் விளையாடியுள்ளார். வேகப்பந்துவீச்சாளரான அவர், இன்னும் சர்வதேச அணியில் இடம்பெறவில்லை.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி மிகவும் தனியுரிமையுடன் நடந்தது. இதில் இரு குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். சச்சின் குடும்பம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. விரைவில் திருமண தேதியையும் அறிவிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சானியா சந்தோக், ஹோட்டல், உணவு, ஐஸ்கிரீம் போன்ற பல துறைகளில் வணிக முயற்சிகளை மேற்கொண்ட பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ரவி காய், மும்பையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரி ஐஸ்கிரீம் பிராண்ட் இவர்களின் சொத்து ஆகும்.
விலங்குகள் மீது அன்பு கொண்ட சானியா, மும்பையில் உள்ள ‘மிஸ்டர் பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி’ நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பங்குதாரராக செயல்படுகிறார். இது செல்லப் பிராணிகளுக்கான ஸ்பா மற்றும் விற்பனை நிலையமாகும். இந்த நிச்சயதார்த்தம் குறித்து கிரிக்கெட் ரசிகர்களும், வணிக உலகத்தினரும் ஆர்வத்துடன் பேசிக்கொண்டு வருகின்றனர்.