இம்பால்: மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் ராணுவம் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. பயங்கரவாத அமைப்புகளின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.

ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, பிஷ்ணுபூர், சூரச்சந்த்பூர், காங்போகி, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, சேனாபதி, தோபால், ஜிரிபாம் மற்றும் மணிப்பூரின் பிற மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில், மணிப்பூர் மாநில காவல்துறை, சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பங்கேற்ற தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்து, சாண்டல் மாவட்டத்தில் மேலும் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. காங்போகி மாவட்டத்தில் பதுங்கு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது மொத்தம் 114 ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன.
பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய பகுதியாகும்.