பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தல் நவம்பரில் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தல் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஹார் மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிக்கத் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டி வருகிறது.
தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: “பீஹார் சட்டசபை தேர்தல் குறித்து அறிவிப்பு அக்டோபர் மாதம் தசரா பண்டிகை முடிந்த பின் வெளியாகும். நவம்பர் 15 முதல் 20க்குள் ஓட்டுகள் எண்ணப்படும். நவம்பர் 22க்குள் முழு தேர்தல் நடவடிக்கையும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.
இதனால் பீஹார் மாநில அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களது பிரசாரத் திட்டங்களை தீவிரமாக வடிவமைத்து வருகின்றன. அதேசமயம், இந்த தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெறும் என்ற தகவல் வெளியானது மாநில மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.