ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் போர்ச் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஜம்மு – காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியின் சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த அச்சுறுத்தலுக்கு இந்திய ராணுவம் தீவிரமாக பதிலடி கொடுத்ததாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூடு சில நிமிடங்கள் நீடித்தது. ஆனால் இந்திய ராணுவத்தினர் உடனடியாக பதிலளித்து தாக்குதலைத் தடுக்க முடிந்தது. இந்தச் சம்பவத்தில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பில் எல்லை பகுதியில் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களான அடில் மற்றும் ஆசிப் என்பவர்களின் வீடுகள் இந்திய ராணுவத்தால் வெடிகுண்டுகள் மூலம் அழிக்கப்பட்டன. இருவரும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெய்டு நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான திடமான நடவடிக்கையாக இந்த வீடுகள் தகர்த்தது கருதப்படுகிறது.
இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கும் பகுதிகள் மற்றும் ஆதரவு தரும் வட்டங்களை அழிக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேலும் பல இடங்களில் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய அரசு, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு எல்லா நிலைகளிலும் பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களை ஆய்வு செய்து வருகிறது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.