இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி ஹபீப் தாஹிர், இந்திய ராணுவத்தால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அவரது இறுதிச் சடங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, நிகழ்வில் பங்கேற்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உள்ளூர் தலைவர் ரிஸ்வான் ஹனிப் மற்றும் அவரது கூட்டாளிகளை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ வழியாக 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டனர்.
பின்னர், ஹபீப் தாஹிர் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஜுலை 28ஆம் தேதி ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் அடையாளம் சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹபீப் தாஹிர் எனத் தெரியவந்தது.
ஹபீப் தாஹிரின் இறுதிச் சடங்கு ஜூலை 30ஆம் தேதி குய்யான் கிராமத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரிஸ்வான் ஹனிப் மற்றும் அவரது குழுவை, பொதுமக்கள் எதிர்த்ததோடு, சடங்கு நடைபெறும் இடத்தில் இருந்து வாக்குவாதத்துக்குப் பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு மீண்டும் வெளிப்படையாக முத்திரை பதிக்கிறது. அதேசமயம், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், தற்போது அவர்களை எதிர்க்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதை இது உறுதி செய்கிறது.