போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் திருநங்கை என்ற அடையாளத்தில் வாழ்ந்த ஒருவர், உண்மையில் வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பதும், அவர் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. புத்வாரா பகுதியில் நேஹா என்ற பெயரில் திருநங்கை வாழ்க்கையை பின்பற்றி வந்த அவரை, குடியுரிமை ஆவணங்களில் ஏராளமான சிக்கல்கள் மற்றும் சந்தேகங்களைத் தொடர்ந்து போலீசார் கண்காணித்து கைது செய்துள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து வந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட கண்காணிப்பில், நேஹா என அடையாளம் கூறிய நபர், உண்மையில் வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அவர் சிறு வயதில், 10வது வயதில் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, முதலில் மும்பையில் 20 ஆண்டுகள் வசித்து, பின்னர் போபாலுக்கு குடிபெயர்ந்துள்ளார். அந்த இடத்தில் அவர் திருநங்கை என்ற பாத்திரத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
நேஹா இந்தியாவில் இருப்பதற்கான ஆதாரமாக, போலி ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றிருந்தார். இவை அனைத்தும் உள்ளூர் ஏஜென்ட்களின் உதவியுடன் முறையற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் வங்கதேசத்துக்கு பலமுறை பயணம் செய்ததையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை தொடரும் நிலையில், அவர் பிறப்பிலேயே திருநங்கையா அல்லது திருநங்கை வேடத்தில் நடித்து வந்தாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அவருக்கு சட்டவிரோத ஆவணங்களை வழங்கிய ஏஜென்ட்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அடையாள ஆவண மோசடி பற்றிய கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.