பெங்களூருவில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக் கொண்டாட்டம், எதிர்பாராத துயர நிகழ்வாக முடிந்தது. சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிற்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்ற தகவல் பரவியதால் கட்டுப்பாட்டை மீறிய திரளான மக்கள் வருகை அளித்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காமாட்சி தேவி உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

கட்டுப்பாடுகளை மீறி மக்கள் மேடைப்பக்கம் நுழைய முயன்றதால் காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால், கூட்டத்தின் அளவு அதிகமாக இருந்ததால், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இது தொடர்பாக நடந்த நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அரசின் தவறுகளுக்காக மன்னிப்பும் கோரினார். மேலும், அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியது. “இவ்வளவு கூட்டம் வருமென்று தெரிந்திருந்தால், ஏன் முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை?” என நீதிபதிகள் கேட்டனர். அரசு தரப்பில், 50,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், 2 லட்சம் பேர் வந்துவிட்டதால் கட்டுப்பாடு சாத்தியமாகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் சித்தராமையா, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்கா தலைமையில் அந்த விசாரணை நடைபெறும். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆர்சிபி அணியினருடனும், டிஎன்ஏ நிறுவனம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கத்தினருடனும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.
மேலும், சம்பவத்திற்கு நேரடி பொறுப்பு வகித்த காவல் துறையினரான கப்பன் பார்க் இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர், மத்திய துணை ஆணையர், கூடுதல் காவல் ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் தயானந்தா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சித்தராமையா விளக்கினார்.
மேலும், மாஜிஸ்திரேட் விசாரணையும், சிஐடி விசாரணையும் நடைபெறவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். “என் அரசியல் வாழ்க்கையில் இத்தகைய சம்பவம் நடந்ததில்லை. இது எனது உள்ளத்தைக் காயப்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் கர்நாடக அரசு உறுதியாக நிற்கும்,” என கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் முழுமையாக நடந்த பின்னரே முழுமையான உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை ஆணையத்துக்குத் தலைமை வகிக்கிறார் மைக்கேல் டி குன்கா – இவர் தான் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியென்றும் குறிப்பிடப்படுகிறது.