புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பூடான் மற்றும் இலங்கைக்கு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் வெளியுறவு அமைச்சகத்துக்கு மொத்தம் ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், வெளிநாடுகளுக்கு உதவி வழங்குவதற்காக ரூ.5,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, சாலைகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிடப்படும்.
பூடான், 2025-26ம் ஆண்டில் ரூ.2,150 கோடி பெறுவதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு உதவி பெறும் நாடாகத் திகழ்கிறது. இது கடந்த ஆண்டுக்கான ரூ.2,068 கோடியை விட அதிகமாகும்.
மாலத்தீவுகளுக்கான இந்தியாவின் ஒதுக்கீடு ரூ.400 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டின் ரூ.200 கோடியிலிருந்து குறைந்து, 2025-26ம் ஆண்டில் ரூ.100 கோடி ஆகியுள்ளது.
மியான்மருக்கான ஒதுக்கீடு 2024-25 பட்ஜெட்டில் ரூ.250 கோடியிலிருந்து 2025-26ம் ஆண்டுக்கு ரூ.350 கோடியாக உயர்ந்துள்ளது. நேபாளத்துக்கான ஒதுக்கீடு ரூ.700 கோடியே தவிர்க்கப்படவில்லை. இலங்கைக்கு பொருளாதார மீட்பு முயற்சிகளை முன்னிட்டு, ஒதுக்கீடு ரூ.245 கோடியிலிருந்து ரூ.300 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு உதவி மாறாமல், ரூ.120 கோடியை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கான உதவி ரூ.200 கோடியிலிருந்து ரூ.225 கோடியாக உயர்ந்துள்ளது, ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான உதவி ரூ.90 கோடியிலிருந்து ரூ.60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.