பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக தனது முதற்கட்ட 71 வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. நேற்று மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இரண்டு கட்டங்களாக அறிவித்தது.

பாஜக சார்பில் ராம் நகர் தொகுதியில் நந்த் கிஷோர் ராம், நர்கடியகஞ் தொகுதியில் சஞ்சய் பாண்டே, லெளரியா தொகுதியில் முன்னாள் அமைச்சர் வினய் பிகாரி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். பாடகி மைதிலி தாகூருக்கு அலிநகர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை சிட்டிங் எம்.பி.க்கள் அல்லது மத்திய அமைச்சர்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை; புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் 57 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குர்மி, குஷ்வாகாஸ் பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெறாதது கவனிக்கத்தக்கது. இதே நேரத்தில், சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி சில தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டியுள்ளது.
’இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு சிக்கலாக நீடிக்க, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ரகோபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். மூன்றாவது முறையாகவும் அதே தொகுதியில் களமிறங்கும் அவர், தந்தை லாலு பிரசாத் மற்றும் தாயார் ராப்ரி தேவியுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஒதுக்கீட்டில் அதிருப்தி காரணமாக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாட்னாவில் பரபரப்பு நிலவியது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி திவ்யா கவுதம் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து திகா தொகுதியில் போட்டியிடுகிறார்.