இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள பீஹார் சட்டசபை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறும். தற்போது ஆட்சியில் உள்ள நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் தலைவர்கள் கட்சி முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில், டில்லியிலிருந்து திரும்பிய பீஹார் காங்கிரஸ் தலைவர்களை தொண்டர்கள் விரட்டி தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. “பணம் வாங்கி சீட் கொடுக்கப்பட்டது” என்கிற குற்றச்சாட்டு கட்சிக்குள் வெடித்துள்ளது.
ஒரு தொகுதிக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியின் மதிப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேசமயம், மற்ற கட்சிகள் தேர்தல் தயாரிப்பில் தீவிரமாக இயங்கும் வேளையில், ராகுல் காந்தி வெளிநாடு சென்றது மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. “தேர்தல் என்றாலே ராகுல் ஏன் ஓடிவிடுகிறார்?” என பா.ஜ., கட்சி கிண்டலடித்துள்ளது.
காங்கிரஸ் சார்பில், “ராகுல் நவம்பர் 7ம் தேதி டில்லி திரும்பி, பீஹார் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுவார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணம் கொடுத்து சீட் வாங்கும் நடைமுறை காங்கிரசில் மட்டுமன்றி பிற கட்சிகளிலும் உள்ளது என்பது அரசியலின் வேதனைக்குரிய உண்மை. மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க அரசியல் கட்சிகள் தங்கள் செயல்பாட்டில் வெளிப்படையாக நடக்க வேண்டிய அவசியம் உள்ளது.