பிகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த திருத்தத்தில், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, வாக்குரிமையை தவிர்த்துவைக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதனால், வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தது. வாக்குரிமைக்கு ஆதாரம் தரும் ஆவணங்களில் ஆதார் சேர்க்கப்படாமை, குடியுரிமை நிரூபிக்கவேண்டிய அவசியம் போன்றவை விவாதிக்கபட்டன. இதற்குப் பதிலாக, இந்திய தேர்தல் ஆணையம், “ஆதார் மட்டும் குடியுரிமைக்கு ஆதாரம் அல்ல” என்று 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆதார் சட்டத்தைக் குறிப்பிட்டு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது. இது பிகாரில் நடைபெறவுள்ள தேர்தலின் நம்பகத்தன்மைக்கும், வாக்காளர்களின் அடையாள உறுதிக்கும் தீர்ப்பு அளிக்கும் முக்கிய வழக்காக கருதப்படுகிறது.