மும்பை நகரில் சட்டவிரோதமாக இயங்கும் பைக் டாக்சி சேவைகளை வெளிச்சத்தில் கொண்டு வந்தது, மஹாராஷ்டிர மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கின் நேரடி நடவடிக்கையால் தான். மாநிலம் முழுவதும் இருசக்கர வாகனங்களை பைக் டாக்சி என பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிரான சிக்கலான சூழலில், மும்பை நகரில் அந்த சேவைகள் தொடரும் நிலையில், அமைச்சருக்கு சந்தேகம் எழுந்தது.

துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து வருகிறோம் எனத் தெரிவித்தாலும், உண்மையை அறிய பிரதாப் சர்நாயக் பயணி போலவே நடித்து ஒரு பைக் டாக்சி சேவையை ‘ரேபிடோ’ ஆப்ஸ் வாயிலாக வேறு நபர் பெயரில் முன்பதிவு செய்தார். தலைமை செயலகமான மந்த்ராலயத்திற்கு முன் வந்த பைக் டாக்சியை பார்த்த அமைச்சர், அந்த ஓட்டுநரிடம் 500 ரூபாய் அளித்த போது, ஓட்டுநர் அதை ஏற்க மறுத்தார். தானே அமைச்சர் என அறிமுகம் செய்து, சட்டவிரோத இயக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.
சட்ட விழிப்புணர்வும், மனிதநேயமும் மிகுந்த அணுகுமுறையில், ஓட்டுநரை கைது செய்யாமல், பின்னணியில் உள்ள நிறுவனங்களை எதிர்த்துப் பாய்வதே தனது நோக்கம் என அவர் தெரிவித்தார். தவறை ஒப்புக்கொண்ட ஓட்டுநரை அமைச்சர் மன்னித்தார்.
இந்த நடவடிக்கையையடுத்து, மும்பை நகரம் மற்றும் பிற பகுதிகளில் இத்தகைய சட்டவிரோத சேவைகள் தொடராமல் இருக்க, கண்காணிப்பை கடுமைப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு கண்டிப்பு உத்தரவும் வழங்கினார்.