கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதாரங்களை அழித்ததில் மேற்கு வங்க காவல் துறை ஈடுபட்டுள்ளது தற்போது நிரூபணமாகியுள்ளது என பா.ஜ.க.வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “தலா காவல் நிலைய பொறுப்பதிகாரி அபிஜித் மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் சாட்சியங்களை அழிப்பதில் கொல்கத்தா காவல் துறை ஈடுபட்டது உறுதியானது.
மம்தா பானர்ஜி பொறுப்பேற்று, தார்மீக அடிப்படையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் இரவுப் பணியில் இருந்த 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பாக காவல் துறையினர் சஞ்சய் ராயை கைது செய்தனர் (33), காவல் துறையில் பணிபுரியும் தன்னார்வலர். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ், நிதி முறைகேடு மற்றும் ஆதரவற்ற சடலங்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதேபோல், இந்த வழக்கை முதலில் விசாரித்த தல காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மண்டல் காலதாமதமாக முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் சாட்சியங்களை அழித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தீப் கோஷ் மற்றும் போலீஸ் அதிகாரி அபிஜித் மண்டல் ஆகியோரை சிபிஐ நேற்று கைது செய்தது. அவர்கள் இருவரையும் செப்டம்பர் 17-ம் தேதி வரை காவலில் வைக்க கொல்கத்தா நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.