பெங்களூரு: “ரன்யா ராவ் தன் உடம்பில் எங்கும் தங்கத்தை மறைத்துக்கொண்டு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர்களின் விவரங்களை சட்டசபை கூடும் போது வெளியிடுவேன். இந்த கடத்தல் குறித்த முழு விவரங்களையும் சேகரித்துள்ளேன். தங்கம் எப்படி வாங்கப்பட்டது. அதை ரன்யா ராவ் எப்படி கடத்தி வந்தார். விசாரணையில் அவருக்கு யார் உதவினார்கள் என்ற விவரம் என்னிடம் உள்ளது” என்று பசனகவுடா பாட்டீல் யட்னல் கூறினார்.

கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளும் நடிகையுமான ரன்யா ராவ் (32) கடந்த 3-ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரகம், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
ரன்யா ராவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சர்வதேச தங்கக் கடத்தல் கும்பல் மற்றும் பெங்களூருவில் உள்ள முக்கிய கும்பல்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு இரவு விடுதியின் உரிமையாளர் தருண் ராஜ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரன்யா ராவ் மீது சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.