திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில், மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வின் போது, “மக்கள் நலனுக்காக செயல்படும் தொண்டர்களை உருவாக்குவதே பாஜகவின் அடிப்படை நோக்கம். தலைவர்களை உருவாக்குவதோ அல்லது பதவிக்கு ஏறும் முயற்சியல்ல இது,” என அவர் வலியுறுத்தினார்.

புதிய அலுவலகங்கள், மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்து, தீர்வு காணும் உதவி மையங்களாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி மே 2 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு வருவதை, மாநிலம் முழுவதும் முக்கிய நிகழ்வாகக் கருத வேண்டும் என்றார். இந்த வருகை, பாஜகவுக்கும் கேரள மக்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான், கேரளாவின் அரசியல் சூழலில் உண்மையான மாற்றம் ஏற்படும் என சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டார். இந்த புதிய அலுவலகங்கள், அந்த மாற்றத்தை நகர்த்தும் முக்கிய செயல் மையங்களாக விளங்கும் என்றார். உள்ளாட்சித் தேர்தல்களில் சிறப்பாக செயல்படும் தொண்டர்களே எதிர்காலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு முன்னேறுவார்கள் என்றும், மக்கள் நம்பிக்கையே பாஜகவில் தலைமை பொறுப்புகளுக்கு வழிகாட்டும் எனக் கூறினார்.
தொண்டர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த கட்சியில், மக்களின் அங்கீகாரமே ஒரே தகுதி என அவர் வலியுறுத்தினார். “யார் தலைமை பொறுப்பு ஏற்க தகுதியானவர் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மக்களிடமே உள்ளது,” என அவர் கூறினார்.
மாநிலத்தின் மற்ற அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்த சந்திரசேகர், இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒரே சாயலில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். “இவர்கள் மக்களிடையே வெறுப்பையும் குழப்பத்தையும் பரப்புகின்றனர். அதற்கெதிராக பாஜக, ஒற்றுமையோடும், அர்ப்பணிப்புடனும் செயல்படும் தொண்டர்களின் கட்சியாக திகழ்கிறது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடியின் வருகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், மே 2 அன்று திருவனந்தபுரத்தில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக, குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் எனவும் ராஜீவ் சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்தார்.