திருவனந்தபுரம்: “”சபரிமலை மண்டலத்தில், இந்த ஆண்டு, மகர விளக்கு சீசனில், தினமும், 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதி செய்யப்படும்,” என, கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் நவம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள மண்டல் மற்றும் மகர விளக்கு சீசன் தொடர்பான உயர் அதிகாரிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் அமைச்சர் வாசவன் கூறியதாவது:
கடந்த சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆடி மாதத்தில் எதிர்பார்த்ததை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
இந்த சீசனில் தினமும் 80,000 பக்தர்கள் ஆன்லைனில் தரிசனம் செய்யலாம். நிலக்கல்லில் தற்போது 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. 10,000 ஆக உயர்த்தப்படும். எரிமேலியில், 1,100 வாகனங்கள் நிறுத்தும் வசதியை, 2,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
விபத்தில் காயமடைந்த பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். சன்னிதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஈசிஜி, எக்கோ போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறை மூலம் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் மேற்கூரைகள் அமைக்கப்படும். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.