திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபானி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் நேற்று தனது மகன் அகிரா நந்தனுடன் வந்தார். பழனி மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு வந்தார். அங்கு இணை ஆணையர் மாரிமுத்து துணை முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உச்சி கால பூஜையில் துணை முதல்வர் பங்கேற்று தனது மகனுடன் தண்டாயுதபானி சுவாமியை தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முருகன் படம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பழனியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பழனியில் இருந்து திருப்பதிக்கு ரயில் சேவையை தொடங்க மத்திய அரசை வலியுறுத்துவேன். தமிழக மக்களின் அன்பு என்னை நெகிழ வைத்துள்ளது. திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடவுளுக்கு யாரும் இப்படி செய்யக்கூடாது. ஆன்மீக யாத்திரை ஒரு மகிழ்ச்சி. தமிழக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.