புதுடில்லி: கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அக்டோபர் 12 முதல் 17 வரை இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தில் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார். வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்த முக்கிய நடவடிக்கைகள் நடைபெறும்.

அவரது பயணத்தின் ஒரு பகுதி மும்பைக்கு தொடர்புடையது, அங்கு கனடா மற்றும் இந்திய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்தியா பயணத்திற்கு பிறகு அனிதா ஆனந்த் சிங்கப்பூர் மற்றும் சீனாவுக்குச் செல்ல உள்ளார். இவர் இதன் மூலம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவுடன் வலுவான, நிலையான கூட்டாண்மையை உருவாக்க முயற்சிக்கிறார்.
அனிதா ஆனந்த் 57 வயதுடையவர், தமிழகம் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய தந்தை ஆனந்த் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர், அம்மா சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர். அவரது தாத்தா வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் சுதந்திர போராட்ட வீரராக இருந்தார். கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்ட இவர் 2019ல் அரசியலில் நுழைந்து ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்று ட்ரூடோ அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
அவரின் கல்வித் பின்னணி மிகவும் வலுவாக உள்ளது. குயீன்ஸ் பல்கலையில் இளநிலை அரசியல் கல்வி, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நீதித்துறை படிப்பு, டல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டம் மற்றும் டொரன்டோ பல்கலையில் முதுநிலை சட்ட படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 2021ல் கனடா பாதுகாப்புத்துறை பதவி வகித்து, ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். அனிதா ஆனந்த் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.