கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 விழுக்காடு அபராத வரி நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாகக் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை எதிர்த்து, கூடுதலாக 25 சதவிகித வரியை அபராதமாக விதித்தது. இதற்காக கடந்த திங்கட்கிழமை டெல்லியில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வர்த்தக துணை பிரதிநிதி பிரெண்ட் லின்ச் தலைமையிலான குழுவினர், இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
அந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, ஆனந்த நாகேஸ்வரன், “இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல, ஆனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 8 முதல் 10 வாரங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். வரி குறையும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியாவுடன் நல்ல உறவைப் பேண விரும்புகிறேன். பிரதமர் மோடி என்னுடைய நெருங்கிய நண்பர்” என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவர், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது அதிக வரி விதிக்கப்பட்டதாகவும், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் போர் விரைவில் முடியும் என்றும் கூறினார்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இந்த வர்த்தக உறவு மற்றும் வரி பிரச்சினை, அடுத்த இரண்டு மாதங்களில் எப்படி தீர்க்கப்படும் என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. வரி குறைந்தால், இந்தியாவின் ஏற்றுமதி சந்தைக்கு பெரிய நிம்மதி கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.