பெங்களூரு: கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ‘பப்’ அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. 2008ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தார். பெங்களூரில் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பெங்களூருவுடன் தனக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருப்பதாகவும் பலமுறை கூறியுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஒட்டியுள்ள கஸ்தூரிபா சாலையில் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன்’ என்ற பெயரில் பப் உள்ளது. பெங்களூருவில், பப்கள் 1:00 மணிக்கு மேல் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி இரவு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சில மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்து, அதிகளவில் இசை ஒலிப்பதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் ரோந்து சென்றனர். விராட் கோலிக்கு சொந்தமான ஒன்று உட்பட நான்கு பப்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்திருப்பது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.