புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கி முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். பிப்ரவரியில் முதல் கட்ட தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்றும் மே மாதத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்வு மாணவர்களின் விருப்பப்படி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பிப்ரவரியில் நடைபெறும் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறவில்லை என்றால், மே மாத தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை மேம்படுத்திக்கொள்ளலாம். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடம் ஆகியவற்றில் குறைந்தது மூன்று பாடங்களில் மீண்டும் எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதன்மூலம் மாணவர்கள் தங்களது செயல்திறனைக் கூட்டும் வாய்ப்பு பெறுவார்கள். குளிர் பிரதேச மாணவர்கள் இரு தேர்வில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
பழைய நடைமுறையைப் போலவே பாடத்திட்டம், வினாத்தாள் வடிவம், உள்மதிப்பீடு தேர்வுகள் ஆகியவை தொடரும். உள்மதிப்பீடு தேர்வு ஒரு முறை மட்டும் நடத்தப்படும் என்றும் அதில் பெற்ற மதிப்பெண்கள் சான்றிதழில் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்படும்; இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும்.
இதுவரை மாணவர்கள் ஆண்டில் ஒரே முறை தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இப்போது இரு வாய்ப்புகள் வழங்கப்படுவதால், மாணவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதோடு, மாணவர்கள் கல்வியை மன அழுத்தமின்றி எதிர்கொள்ளும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இந்த புதிய நடைமுறை, கல்வி துறையில் மாணவர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.