புதுடில்லி: லட்சத்தீவில் இரு ராணுவ விமானத்தளங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
லட்சத்தீவுப் பகுதியில் இரு ராணுவ விமானத்தளங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு அரணை வலுப்படுத்துவதுடன், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில் மத்திய அரசு இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மினிகாய் தீவுகளில் புதிய விமான தளம் அமைக்கப்படுவதுடன், அகத்தி தீவில் தற்போது உள்ள விமான தளம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துடன், நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களுக்கான தளங்களாக, முப்படைகளுக்கும் பயன் இருக்கும் வகையில் இவை அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மினிகாய் தீவில் அமைய உள்ள விமானத்தளம் சுற்றுலா வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.